காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பட்டதாரி இளம்பெண் தர்ணா


தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பட்டதாரி இளம்பெண் புதன்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறில் 6 ஆண்டுகள் காதலித்து விட்டு கைவிட்ட காதலனை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி பட்டதாரி இளம்பெண் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் தாசில்தாரிடம் புகார் மனுவையும் அவர் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டதாரி இளம்பெண்

கயத்தாறு தாலுகா காமநாயக்கன்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த சால்நாயக்கன்பட்டி லெட்சுமணன் பெருமாள் மகள் எபிலாதேவி (வயது 24). இவர் பி.எஸ்.சி., பி.எட். படித்துள்ளார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த காளிமுத்து மகன் பாலமுருகனும் கல்லூரியில் படிக்கும்போது இருந்து கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்தநிலையில், சமீப நாட்களில் எபிலாதேவியுடன் பேசுவதை பாலமுருகன் நிறுத்தி விட்டாராம். இதுகுறித்து விவரம் கேட்ட எபிலாதேவியிடம், பெற்றோர் தனக்கு திருமணம் முடிக்க வேறு பெண் பார்த்துள்ளதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறினாராம்.

கிடப்பில் போடப்பட்ட புகார்

இதனால் மனமுடைந்த எபிலாதேவி, தன்னுடன் பாலமுருகனை சேர்த்து வைக்கக்கோரி கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு ெசய்த போலீசார் மேல்நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே வருகிற 7-ந்தேதி பாலமுருகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதாக கிடைத்த தகவலால் அதிர்ச்சி அடைந்த எபிலாதேவி நேற்று கயத்தாறு தாலுகா அலுவலகத்துக்கு வந்தார்.

தர்ணா போராட்டம்

பாலமுருகனுடன் தன்னை சேர்த்து வைக்ககோரி அவரது புகைப்படத்துடன் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் தாசில்தார் சுப்புலட்சுமியிடம் புகார் மனுவை கொடுத்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய தாசில்தார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனுவை அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் பெற்றோரை வரவழைத்து தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தனது மகளுடன் பாலமுருகனை சேர்த்து வைக்க அவரது பெற்றோரும் கோரிக்கை வைத்தனர். பின்னர் அவர்களுடன் எபிலாதேவியை தாசில்தார் அனுப்பி வைத்தார். இதனால் தாலுகா அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.


Next Story