இந்து அமைப்பின் தலைவி தர்ணா
பழனி மாரியம்மன் கோவில் முன்பு இந்து அமைப்பினர் தலைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
பழனி கிழக்கு ரத வீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் சாமி தரிசனம் செய்ய உள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்தநிலையில் சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் தலைவி சரசுவதி நேற்று பழனி மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் திடீரென்று கோவில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து தி.மு.க. நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசி வருவதாகவும், அவரை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது, அவரிடம் கோவில் முன்பு அமர்ந்து பக்தர்களுக்கு இடையூறாக போராட்டம் செய்யக்கூடாது என போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் சரசுவதி போராட்டத்தை கைவிட மறுத்தார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.