ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தர்ணா
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் ஜீவன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பேச்சியம்மாள், பொதுக்குழு உறுப்பினர் பழ.தேவேந்திரன், மாநில பொதுச் செயலாளர் மயில் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் பேசினர். போராட்டத்தில் 19 ஆண்டுகளாக ஆசிரியர், அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ள தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளபடி கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் புதிய தேசிய கல்விக்கொள்கைைய திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். 50 ஆண்டுகளாக பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் கீதா நன்றி கூறினார்.