கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தர்ணா


கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தர்ணா
x

100 நாள் வேலை திட்டத்தில் அடையாள அட்டை வழங்காததால் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

திருப்பத்தூர்

குழந்தைகளுடன் தர்ணா

திருப்பத்துார் மாவட்டம், கந்திலி ஊராட்சி ஒன்றியம் பெரியகசிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வினி (வயது 23). இவர் நேற்று திருப்பத்துார் கலெக்டர் அலுவலகம் முன்பு தனது குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த அதிகாரிகள் தர்ணாவில் ஈடுபட்ட அஸ்வினியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அஸ்வினி கூறுகையில் எனக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டும் பெண் குழந்தை என்பதால், என் கணவர் என்னை விரட்டி விட்டார். இதனால் 3 ஆண்டுகளாக தாய் வீட்டில் வசித்து வருகிறேன்.

100 நாள் வேலை அட்டை

இந்தநிலையில் 100 நாள் வேலை திட்டத்துக்கு பெரியகசிநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் எனக்கு அட்டைகள் வழங்காமல் ஊராட்சி மன்ற தலைவர் புறக்கணித்து வருகிறார்.

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு தரக்குறைவாக பேசுகிறார். எனக்கு 100 நாள் வேலை திட்ட அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில், தர்ணாவை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.


Next Story