டேன்டீ தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்


டேன்டீ தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சேரங்கோடு டேன்டீ தொழிற்சாலையை மூடுவதை கைவிட கோரி தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

பந்தலூர்,

சேரங்கோடு டேன்டீ தொழிற்சாலையை மூடுவதை கைவிட கோரி தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேயிலை வரத்து குறைவு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு டேன்டீ தேயிலை தொழிற்சாலையில் 40 நிரந்தர தொழிலாளர்கள், 40 தற்காலிக தொழிலாளர்கள் என மொத்தம் 80 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது இந்த தொழிற்சாலைக்கு பச்சை தேயிலை வரத்து குறைந்து உள்ளது. இதனால் தொழிற்சாலைக்கு வரும் பச்சை தேயிலை நெல்லியாளம் மற்றும் பாண்டியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சேரங்கோடு டேன்டீ தொழிற்சாலை திடீரென மூடப்பட்டது. இதனால் நிரந்தர தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களில் பணியாற்ற வேண்டும் என டேன்டீ நிர்வாகம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் தற்காலிக தொழிலாளர்கள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் பீதி அடைந்தனர்.

தர்ணா போராட்டம்

இதற்கிடையே சேரங்கோடு டேன்டீ தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்படுவதாக தகவல் பரவியது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேயிலை தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் டேன்டீ தொழிற்சாலையை மூடுவதை டேன்டீ நிர்வாகம் கைவிட வேண்டும். நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களை தொழிற்சாலையில் பணிபுரிய உத்தரவிட வேண்டும். தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த டேன்டீ கோட்ட மேலாளர் புஷ்பராணி, முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொழிற்சாலை பராமரிப்பு பணிக்காக 15 நாட்கள் மூடப்படுவதாகவும், பணி முடிந்த பின்னர் நிரந்தர, தற்காலிக தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படும். அதுவரை தேயிலை தோட்டங்களில் அனைவரும் பணிபுரியலாம் என்று கோட்ட மேலாளர் தெரிவித்தார். இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story