பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டம்


பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 13 April 2023 1:00 AM IST (Updated: 13 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று மாலை தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட தலைவர் ரவி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன், மாநில செயலாளர் கந்தசாமி, மாநில துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில், காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை-1 பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்களை நிரப்ப வேண்டும். களப்பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவிலிருந்து முழுமையாக விதிவிலக்கு வழங்க வேண்டும். ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் 7.11.2008 முன்தேதியிட்ட பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story