தை அமாவாசையையொட்டி கோவில், நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையையொட்டி நேற்று கோவில் மற்றும் நீர்நிலைகளில் பலரும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தை அமாவாசையையொட்டி நேற்று கோவில் மற்றும் நீர்நிலைகளில் பலரும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தை அமாவாசை
ஆண்டுதோறும் வரும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் இறந்துபோன தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன்படி தை அமாவாசையான நேற்று நீர்நிலைகளிலும், பல்வேறு கோவில்களிலும் பலரும் இறந்த தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.
மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் தர்ப்பணம் கொடுப்பதற்காக நேற்று அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
சரவண பொய்கை
திருப்பரங்குன்றம் சரவண பொய்கை வளாகத்தில் நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து காலை 11 மணி வரை ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். பின்னர் அவர்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக தர்ப்பணம் நிகழ்வு நடந்ததால் சரவண பொய்கை களைகட்டியது.
இதேபோல திருநகர் அண்ணா பூங்கா வளாகத்தில் இந்துசமய அறநிலையதுறைக்கு உட்பட்ட சித்திவிநாயகர்கோவில் வளாகத்திலும் தர்ப்பணம் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து பசுக்களுக்கு அகத்திகீரை வாங்கி கொடுத்தனர். இதனால் அகத்திகீரைக்கு மவுசு ஏற்பட்டு விலை தீடீரென உயர்ந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் வைகையால் படித்துறையில் உள்ள வரதவிநாயகர் கோவில் வளாகத்தில் தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். திருவேடகம் படித்துறை பகுதியில் தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் குவிந்தனர். அதேபோல் திருவேடகம் சீரடிசாய்பாபா கோவில் முன்பாக வைகை ஆற்று கரையில், அணைப்பட்டி ஆஞ்சநேயர்கோவில் அருகில் வைகைஆற்றுக்கு பகுதியில் தங்களது முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு கோவில்கள் மற்றும் நீர்நிலைகளில் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு பலரும் தர்ப்பணம் கொடுத்து, கோவில்களில் வழிபாடு செய்தனர்.
நூபுரகங்கையில் நீராடல்
மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் மலை உச்சியில் உள்ள நூபுர கங்கையிலும் நேற்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் வரிசையாக சென்று நீராடினர். பின்னர் அங்குள்ள ராக்காயி அம்மனை விளக்கேற்றி தரிசனம் செய்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வித்தக விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மற்றும் வேல்சன்னதியிலும் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. அழகர் மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் பெருமாள், காவல் தெய்வம் பதினெட்டாம் படி கருப்பணசுவாமி கோவிலிலும் பக்தர்கள் நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.