பருவமழை கைகொடுத்ததா? கைவிட்டதா?; விவசாயிகள் கருத்து
பருவமழை கைகொடுத்ததா? கைவிட்டதா? என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகில் பல தொழில்கள் இருந்தபோதும், அனைத்து மக்களின் உணவிற்கு ஆதாரமாக விளங்குவது விவசாயம்தான். நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்த விவசாயிகளுடைய உழைப்பின் பலனாகவே நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு, அரிசியாகவும், தானியங்களாகவும், காய்கறிகளாகவும் கிடைக்கப்பெற்று மக்களின் பசியை போக்குகின்றன. ஆனால் அவ்வளவு எளிதாக பயிர்கள் விளைந்து விடுவதில்லை. இயற்கை இடர்பாடுகள் உள்பட பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.
பருவ மழை
குறிப்பாக விவசாயத்திற்கு விவசாயிகள் பெரிதும் நம்பியிருப்பது மழையைத்தான். அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பகுதிகளுக்கு வடகிழக்கு பருவமழையே பிரதானமாக இருக்கிறது. பருவம் தவறாமல் பெய்யும் மழையே விவசாயத்தில் நல்ல விளைச்சலை தேடி தரும். ஆனால் சமீப காலமாக உலக வெப்பமயமாதல் மற்றும் பல்வேறு காரணங்களால் சரியான நேரத்தில் பருவ மழை பெய்யாததும், அப்படியே பெய்தாலும் போதுமான அளவு பெய்யாமலும் அல்லது தேவையற்ற நேரத்தில் மழை பொழிவு ஏற்பட்டும் விவசாயிகளின் உழைப்பை வீணடிக்கிறது.
இருப்பினும் விவசாயிகள் உழவுத்தொழிலை தொடர்ந்து மேற்கொண்டுதான் வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கடந்து சென்ற பருவமழை காலத்தில் போதிய மழை பெய்ததா? அல்லது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்ததா? என்பது குறித்து விவசாயிகளும், அதிகாரிகளும் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
பயிர்களுக்கு வாழ்வு கிடைத்தது
தமிழக விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் நீலகண்டன்:- கடந்த 2021-ம் ஆண்டை விட மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழை குறைவுதான். ஆனால் மழைக்காலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களுக்கு மழையால் வாழ்வு கிடைத்தது. நோய் தாக்குதலினால் சில பயிர்கள் பாதிப்படைந்தன. தாமதமாக மானாவாரி பயிர் சாகுபடி செய்திருந்தவர்களுக்கு மகசூல் பாதிப்பு ஏற்பட்டது. சரியான பருவத்தில் பயிர் சாகுபடி செய்திருந்தவர்களுக்கு மகசூல் அதிக அளவு கிடைத்துள்ளது. பச்சைமலை பகுதிகளில் அதிக மழை பெய்ததால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்னும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
நாற்றங்கால் காய்ந்தது
மல்லூரை சேர்ந்த விவசாயி கோ.விஜயகுமார்:- அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட குறைந்த அளவே பெய்துள்ளது. மாவட்டத்தில் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, கடலை, ஆமணக்கு போன்ற பணப்பயிர்கள் நல்ல மகசூலை கொடுத்துள்ளது. அதேசமயம் மாவட்டத்தில் போதிய அளவில் நீர் நிலைகள் நிரம்பவில்லை. ஏரி, குளங்களின் பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள நஞ்சை நெல் சாகுபடி குறைந்து விட்டது. சில ஊர்களில் நெல் நாற்றுவிட்டு நாற்றங்காலிலேயே காய்ந்து விட்டது. நிலத்தடி நீர் மட்டமும் உயரவில்லை. எனவே வரும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
மகசூல் குறைவு
வேப்பந்தட்டை அருகே பாலையூரை சேர்ந்த விவசாயி சின்னசாமி:- வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் இந்தாண்டு பருவ மழையால் மானாவாரி பயிர்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. குறிப்பாக மக்காச்சோளத்திற்கு தேவையான அளவு மழை பெய்துள்ளது. இருப்பினும் இந்த மழை 15 நாட்களுக்கு முன்பாக பெய்திருந்தால் விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைத்திருக்கும். கிணற்று பாசனம் மூலம் பயிரிடக்கூடிய விவசாயிகள் சிலர் வறட்சி சமயத்தில் ஒரு முறை நீர் இறைத்து கூடுதல் மகசூல் பெற்றுள்ளனர். காலம் தாழ்ந்து பருவ மழை பெய்ததால் மானாவாரி விவசாயிகளுக்கு மகசூல் 25 சதவீதம் அளவு குறைந்துள்ளது. இருப்பினும் இழப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் மற்ற இடங்களை காட்டிலும் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் மழை அளவு குறைந்த அளவே பெய்துள்ளது. அதாவது ஏரி, குளங்களில் அதிக அளவு நீர் நிறையவில்லை.
ஏரிகளை தூர்வார வேண்டும்
விக்கிரமங்கலத்தை சேர்ந்த விவசாயி சோழ பாண்டியன்:- முந்தைய ஆண்டுகளை பார்க்கும்போது கடந்த ஆண்டில் பருவமழை குறைவாகத்தான் பெய்துள்ளது. இதனால் எங்கள் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. ஏரி பாசனத்தை மட்டுமே நம்பி நடவு செய்துள்ள நெற்பயிர்கள் காய்ந்து போகும் நிலையில் உள்ளன. பருவமழை கடந்துவிட்ட நிலையில் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை பெய்தால் மட்டுமே நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. மேலும் பாசனத்திற்கு பயன்படும் ஏரிகளை இனம் கண்டு, தூர்வாரினால் இன்னும் அதிகமாக தண்ணீரை மழைக்காலங்களில் சேமித்து வைக்க முடியும். இதன் மூலம் விவசாயம் செய்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு பருவமழை காலங்களில் பெய்கின்ற மழை நீரை சேமித்து வைக்க ஏரிகளை தூர்வார முன் வர வேண்டும்.