மீன்பிடிக்க சென்ற முதியவர் கல்குவாரி குட்டையில் மூழ்கினாரா?
வேலூர் அருகே மீன்பிடிக்க சென்ற முதியவர் கல்குவாரி குட்டையில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேலூர் அருகே மீன்பிடிக்க சென்ற முதியவர் கல்குவாரி குட்டையில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மீன்பிடிக்க சென்ற முதியவர்
வேலூரை அடுத்த துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 73), கூலித்தொழிலாளி. இவர் பொழுதுபோக்காக அவ்வப்போது அந்த பகுதியில் உள்ள ஏரி, குளங்கள், குட்டைகளில் மீன்பிடிக்க செல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மாலை சின்னதம்பி சித்தேரியில் உள்ள கல்குவாரியில் தேங்கியிருக்கும் குட்டையில் மீன்பிடிக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று தேடிப்பார்த்தனர். கல்குவாரி குட்டையோரத்தில் சின்னதம்பியின் ஆடைகள், காலணிகள் இருந்தன.
அதனால் அவர் குட்டையில் இறங்கி வலைவீசும்போது எதிர்பாராத விதமாக மூழ்கியிருக்கலாம் என்று குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அரியூர் போலீசார் அங்கு சென்று கல்குவாரி குட்டையை பார்வையிட்டு அந்த பகுதியில் விசாரித்தனர்.
தேடும் பணி தீவிரம்
அதைத்தொடர்ந்து வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தணிகைவேல் தலைமையிலான வீரர்கள் கடந்த 2 நாட்களாக கல்குவாரி குட்டையில் இறங்கி சின்னதம்பியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து 3-வது நாளான இன்று தேடும் பணிக்கு அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டனர். 15 பேர் அடங்கிய பேரிடர் மீட்புப்படையினர் குட்டையின் பல்வேறு இடங்களில் இறங்கி தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் இணைந்து தீயணைப்பு வீரர்களும் தேடினார்கள். இரவு 7 மணி வரை தேடியும் சின்னதம்பி கிடைக்கவில்லை.
கல்குவாரி குட்டை சுமார் 200 அடி ஆழம் உடையது. மீன்பிடிப்பதற்காக வலையுடன் குட்டையில் இறங்கிய சின்னதம்பி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பாறை இடுக்கில் அல்லது முட்புதரில் சிக்கியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.