திருமணம் நடந்ததா? என விசாரிக்காமல் வழங்கும் பதிவுச்சான்றிதழ் போலியானது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மாணவியை கட்டாயப்படுத்தி திருமணச்சான்றிதழில் கையெழுத்து வாங்கியதை ரத்து செய்தும், திருமண விழா நடந்ததை விசாரிக்காமல் வழங்கப்படும் பதிவுச்சான்றிதழ் போலியானதாக கருதப்படும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மாணவியை கட்டாயப்படுத்தி திருமணச்சான்றிதழில் கையெழுத்து வாங்கியதை ரத்து செய்தும், திருமண விழா நடந்ததை விசாரிக்காமல் வழங்கப்படும் பதிவுச்சான்றிதழ் போலியானதாக கருதப்படும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மாணவியை மிரட்டி திருமணப்பதிவு
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டபடிப்பு படித்து வந்தேன். அந்த சமயத்தில் கல்லூரிக்கு வந்த உறவினர் ஒருவர், எனது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக பொய்யான தகவலை கூறி என்னை அங்கிருந்து அழைத்து சென்றார்.
ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் திடீரென பதிவுத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று என்னை கட்டாயப்படுத்தி, மிரட்டி எனக்கும், அவருக்கும் திருமணம் நடந்ததாக கூறி பதிவுச்சான்றிதழில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். என்னுடைய விருப்பமில்லாமல் பதிவு செய்த திருமண சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
சட்டவிரோதம்
இந்த வழக்கு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் எஸ்.எம்.ஏ.ஜின்னா ஆஜராகி, மனுதாரருடன் ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்ததாக கூறியிருப்பது தவறான தகவல். இதுதொடர்பாக எந்த ஆவணமும் இணைக்கப்படவில்லை. மனுதாரரை மிரட்டி சான்றிதழில் கையெழுத்து பெற்றிருப்பது சட்டவிரோதம் என வாதாடினார்.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
சட்டப்படி, இஸ்லாமிய முறைப்படியிலான திருமணத்தை பதிவு செய்ய வழங்கப்படும் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட ஜமாத் பெயர் மற்றும் அதன் முகவரி, திருமணம் செய்தவர்களின் ஒப்புதல், நிச்சயதார்த்தம் நடந்ததற்கான ஆவணங்கள் ஆகியவை இடம் பெற்று இருக்க வேண்டும்.
இவை அனைத்தும் சரிவர பின்பற்றியே திருமணத்தை பதிவு செய்ய முடியும். இந்த தகவல்கள் மனுதாரர் விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை. எந்த மதத்தை பின்பற்றக்கூடியவர்களாக இருந்தாலும் அவரவர் மதத்திற்குரிய முறையில் திருமணம் நடைபெற்ற பிறகுதான் அதை சட்டப்படி பதிவு செய்ய முடியும்.
போலி சான்றிதழ்
பதிவுத்துறை பதிவாளர், சட்டப்பூர்வ படிவங்களை மட்டும் நம்பி எந்திரத்தனமாக திருமணத்தை பதிவு செய்ய முடியாது. அவர், திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, இருதரப்பினரும் திருமண விழாவை தங்களின் மத சடங்குகளின்படி நடத்தியுள்ளனர் என்பதை அறிந்து திருப்தி கொள்ள வேண்டும். திருமண விழா நடந்ததை ஆராயாமல் திருமணச் சான்றிதழ் வழங்கப்பட்டால், அது போலி திருமணச் சான்றிதழாக மட்டுமே கருதப்படும். திருமண பதிவு என்பது ஏற்கனவே நடந்த திருமணத்தை சட்டப்படி பதிவதாகும்.
இந்த வழக்கை பொறுத்தவரை, முறையான திருமணம் நடந்ததற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே மனுதாரருக்கு திருமணம் நடந்ததாக பாளையங்கோட்டை பதிவாளர் வழங்கிய சான்றிதழ் ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.