கண்மாயை ஆக்கிரமித்து விளையாட்டு அரங்கம் அமைத்துவிட்டு பின்னர் இடித்துவிட்டீர்களா?


கண்மாயை ஆக்கிரமித்து விளையாட்டு அரங்கம் அமைத்துவிட்டு பின்னர் இடித்துவிட்டீர்களா?
x

கண்மாயை ஆக்கிரமித்து விளையாட்டு அரங்கம் அமைத்துவிட்டு பின்னர் இடித்துவிட்டீர்களா? வரிப்பணம் வீணாவதை ஏற்க முடியாது என்று அரசு தரப்பு பதிலுக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மதுரை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்த ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

விருதுநகர் மாவட்டம் டி.வேலன்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆலங்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் சேகரிக்கப்படும் தண்ணீர் மூலம் பல கிராமங்களில் உள்ள சுமார் 200 ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடக்கிறது. இந்தநிலையில் கடந்த 2019-2020-ம் ஆண்டு ஆலங்குளம் கண்மாயை ஆக்கிரமித்து 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அம்மா தேசிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது. இது சட்டவிரோதம். இதனால் கண்மாயை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே ஆலங்குளம் கண்மாயில் அமைக்கப்பட்டு உள்ள அம்மா தேசிய விளையாட்டு அரங்கத்தை அகற்ற உத்தரவிட வேண்டும். நீர்நிலையை ஆக்கிரமித்து விளையாட்டு அரங்கம் கட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், நீர்நிலையை ஆக்கிரமித்து விளையாட்டு அரங்கத்தை எதன் அடிப்படையில் கட்டப்பட்டது? இதற்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டிய விளையாட்டு அரங்கம் தற்போது இடித்து அகற்றப்பட்டுவிட்டது என்றார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பொதுமக்களின் வரிப்பணம் ஒருரூபாய் கூட வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து அரசு தரப்பில் விரிவான தகவல் பெற்று தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.


Next Story