2-வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை
பழையாறு துறைமுகத்தில் பைபர் படகு மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
கொள்ளிடம்ூ
பழையாறு துறைமுகத்தில் பைபர் படகு மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
பழையாறு துறைமுகம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 50 விசைப்படகுகள், 450 பைபர் படகுகள் மற்றும் 300 நாட்டு படகுகள் மூலம் 6,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் வருடந்தோறும் மீன் இனவிருத்தியை பெருக்கும் வகையில் ஏப்ரல் மாதம் தொடங்கி 60 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விசைப்படகுகள் 60 நாட்களுக்கு கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடத்துக்கான மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15-ந் தேதி முதல் தொடங்கி வரும் ஜூன் மாதம் 14-ந் தேதி முடிவடைகிறது.
வானிலை மையம் எச்சரிக்கை
மீன்பிடி தடைக்காலத்தை ஒட்டி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது விசைப்படகுகளை பழையாறு துறைமுகத்தில் உள்ள படகு அணையும் தளத்திலும், அதனை ஒட்டி செல்கின்ற பக்கிங்காம் கால்வாயிலும் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
இந்்த நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதை ஒட்டி இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து மீன்பிடித் துறை சார்பில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க செல்லவில்லை
மீன்பிடி தடைக்காலத்தினால் பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் மூலம் சுமார் 6000 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர். இப்போது கடல் சீற்றமாக இருந்து வருவதால் மீன்பிடி துறையின் அறிவுறுத்தலை ஏற்று பழையாறு துறைமுகத்தின் மூலம் மீன் பிடிக்க செல்லும் 400 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டுப் படகுகளும் நேற்று முன்தினம் முதல் மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் 3000 பேர் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பழையாறு துறைமுக வளாகத்தில் மீன் உலர வைத்தல், பதப்படுத்துதல், வகைப்படுத்துதல், விற்பனைக்கு அனுப்பி வைத்தல், ஐஸ் கட்டி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டதொழிலாளர்களும் பழையாறு துறைமுகத்துக்கு செல்ல முடியாமல் வேலை இழந்துள்ளனர்.