நாமக்கல் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதல்; பேக்கரி உரிமையாளர் சாவு-மேலும் 3 பேர் படுகாயம்
நாமக்கல் அருகே சாலையோரம் நின்று கொண்டு இருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் பேக்கரி உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாமக்கல்:
லாரி மீது கார் மோதல்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 39). பேக்கரி உரிமையாளர். இவர் நேற்று அதிகாலை ஒரு காரில் தனது நண்பர்களான ராஜேஸ் (25), கணேஷ் (34), ஜெயக்குமார் (29) ஆகியோருடன் மளிகை பொருட்கள் வாங்க சேலம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டைமேடு பகுதியில் வந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் வேல்முருகன் உள்ளிட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பேக்கரி உரிமையாளர் சாவு
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேல்முருகன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். மீதமுள்ள 3 பேருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் பேக்கரி உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.