கிணற்றில் விழுந்த 2 பேரை காப்பாற்றி வீர மரணமடைந்தபெரம்பலூர் தீயணைப்பு வீரருக்கு ஜனாதிபதி பதக்கம்


கிணற்றில் விழுந்த 2 பேரை காப்பாற்றி வீர மரணமடைந்தபெரம்பலூர் தீயணைப்பு வீரருக்கு ஜனாதிபதி பதக்கம்
x

கிணற்றில் விழுந்த 2 பேரை காப்பாற்றி வீர மரணமடைந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர் ராஜ்குமாருக்கு ஜனாதிபதியின் தீயணைப்பு துறையின் பதக்கம், அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்

விஷ வாயு தாக்கி...

பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர் ராஜ்குமார். இவர் கடந்த 12.7.2020-ல் கிணற்றில் உயிருக்கு போராடிய 2 பேரை மீட்டு, விஷ வாயு தாக்கி வீரமரணம் அடைந்தார். தீயணைப்பு வீரர் ராஜ்குமாரின் சேவையை பாராட்டி நாட்டின் உயரிய பதக்கமான வீரதீரச்செயலுக்கான ஜனாதிபதியின் தீயணைப்பு துறையின் பதக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த பதக்கம் வழங்கும் விழா மராட்டியம் மாநிலம், நாக்பூரில் உள்ள தீயணைப்பு கல்லூரியில் கடந்த 17-ந்தேதி நடைபெற்றது. விழாவில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய் கலந்து கொண்டு ஜனாதிபதியின் தீயணைப்பு துறையின் பதக்கத்தை தீயணைப்பு வீரர் ராஜ்குமாரின் மனைவியும், பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தின் இளநிலை உதவியாளருமான உமாவிடம் வழங்கினார். இந்த பதக்கம் தமிழகத்தில் இருந்து ஒருவர் பெறுவது தமிழ்நாடு தீயணைப்பு துறை வரலாற்றில் இது தான் முதல் முறையாகும். மேலும் இப்பதக்கப்படியான மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் ராஜ்குமாரின் மனைவி உமாவுக்கு வழங்கப்படும்.

பதக்கத்தை காண்பித்து நன்றி தெரிவித்தார்

கணவர் ராஜ்குமாரின் பதக்கத்தை பெற்று வந்த உமா தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் டி.ஜி.பி. ஆபாஷ் குமார், கூடுதல் டி.ஜி.பி. (பயிற்சி மற்றும் செயல்பாடுகள்) விஜயசேகர், திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் விஜயகுமார், பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா ஆகியோரிடம் காண்பித்து கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்து கொண்டார். ஏற்கனவே தமிழக அரசு ராஜ்குமாரின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சமும், கருணை அடிப்படையில் அவரது மனைவி உமாவுக்கு அரசு வேலையும் வழங்கியது.

வீர மரணமடைந்த ராஜ்குமாரின் குடும்பத்துக்கு தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரர்கள், அவர்களின் சொந்த முயற்சியில் திரட்டி ரூ.44.42 லட்சத்தை நிதி உதவியாக ஏற்கனவே வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story