மலேசியாவில் இறந்ததொழிலாளி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை
மலேசியாவில் இறந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மலேசியாவில் இறந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
குறை தீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் கிராமத்தை சேர்ந்த சொர்ணம் என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வந்து கண்ணீர் மல்க கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது கணவர் அய்யாத்துரை (வயது 48) மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஓட்டலில் கடந்த 6 மாதங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 8-ந் தேதி மதியம் 2 மணியளவில் எனது கணவர் வேலை செய்த ஓட்டலில் இருந்து தொலைபேசி மூலம் பேசிய நபர் எனது கணவர் 2 நாட்களாக வேலைக்கு வரவில்லை என்று கூறினார். அன்று இரவு 8.15 மணியளவில் வீடியோ கால் மூலம் பேசியவர்கள் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையை காண்பித்தனர்.
எனது கணவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிகிறது. எனவே, அது குறித்து உரிய விசாரணை நடத்தி எனக்கு நியாயம் கிடைக்கவும், எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தினமும் பூஜை
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிளையூரணி கிராமத்தை சேர்ந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், மாப்பிளையூரணியில் உள்ள செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் பத்திரகாளியம்மன் ஆலயம் ஆகியவை சில பிரச்சினை தொடர்பாக பூட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் கோவில்களில் தினமும் நடைபெறும் பூஜைகள் நடைபெறவில்லை. இதனால் ஊர் மக்களுக்கு தீங்கு ஏற்படும் என அஞ்சுகிறோம். எனவே, ஆலயத்தில் போடப்பட்டுள்ள பூட்டை அகற்றி தினசரி பூஜைகள் வழக்கம் போல் நடைபெறவும், மக்கள் வழிபடவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஆத்தூர் பெரிய தெருவை சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஆறுமுகநேரி அருகே கடந்த 6-ம் தேதி நடந்த சாலை விபத்தில் திருச்செந்தூர் நகராட்சி ஆணையரின் வாகனம் மோதி, இருச்சக்கர வாகனத்தில் சென்ற வடக்கு ஆத்தூர் பெரிய தெருவை சேர்ந்த காஜா முகைதீன் என்பவர் உயிரிழந்தார். அவரது மனைவி காயமடைந்து உள்ளார். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கில் திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் பெயர் சேர்க்கவில்லை. அவரது பெயரையும் வழக்கில் சேர்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.