ஆதார் எண் இணைப்புகட்டாயம் என அறிவிப்பு மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் பொதுமக்கள் கருத்து


ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டதால் மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சேலம்

சேலம்,

இணைப்பது கட்டாயம்

ஆதார் கார்டு என்பது நாட்டு மக்களின் அடையாளமாக மட்டுமின்றி அரசு திட்டங்கள், மானியங்களில் முறைகேடுகளை தடுக்கும் ஆயுதமாகவும் மாறி இருக்கிறது. சமையல் கியாஸ் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமானவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன. தற்போது வங்கி கணக்கு எண், வருமான வரி கணக்கு எண், வருங்கால வைப்பு நிதி எண், வாக்காளர் அடையாள அட்டை எண் வரிசையில், தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணுடனும் ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாய மாக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி இனி மின்சார கட்டணம் செலுத்துகிறவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் எண்ணை இணையத்தளத்தின் வழியாக இணைப்பது அவசியமாகிறது. ஏற்கனவே 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு கடந்த 15-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இதுபற்றி மக்கள் கருத்தை அறிய முயன்றபோது பெரும்பாலானோர் 'அப்படியா? எங்களுக்கு ஒன்றும் தெரியாதே...யாரும் சொல்லலேயே..!' என்று அப்பாவித்தனமாகக் கேட்டனர்.

அமைச்சர் விளக்கம்

தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக www.tnebltd.gov.in/adharupload இணைய வழி மூலம் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின்சார கட்டணத்தை கட்ட முடியும் என்று கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் இணைப்பு 100 யூனிட் இலவச மின்சாரத்தை பறிக்கும் முயற்சியா? என்று வீட்டு வாடகைத்தாரர்களின் மத்தியில் அச்சம் எழுந்த வேளையில், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ' ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தாலும் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று பரப்பப்படுவது வெறும் வதந்தி' என்று விளக்கம் அளித்தார்.

எனினும் மக்கள் மத்தியில் குழப்பமும், அச்சமும் தொடர்ந்து வரும் வேளையில், 'ஆன்லைன்' மூலம் ஆதார் எண்ணை இணைப்பதிலும் அவ்வப்போது தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டு மின்நுகர்வோர்களை பரிதவிக்கவிட்டு வருகிறது.

இதுகுறித்து மக்கள் வெளிபடுத்திய கருத்துகள் வருமாறு:-

சிறப்பு கவுண்ட்டர்கள்

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன்:-

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரிய அலுவலகத்தில் எந்த ஒரு ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் ஆதார் இணைக்க வில்லை என்று கூறி மின் கட்டணம் வாங்க மறுக்கிறார்கள். அரசு குறிப்பிட்டுள்ள இணையதளம் செல்போனில் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. ஆதார் எண் இணைப்பதற்காக தனியார் கம்ப்யூட்டர் மையத்துக்கு சென்றேன். ஒரு கார்டு பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் கால் மணி நேரமாகிறது. அதிலும் செல்போன் எண்ணிற்கு ஓ.டி.பி. வருவதற்கு 5 நிமிடமாவது ஆகிறது.

முடிவில் கம்ப்யூட்டர் மையத்தின் உரிமையாளர் செல்போன் எண்ணுக்கு தான் பதிவு செய்யப்பட்டுள்ளது (டன்) என்று வருகிறது. ஆனால் நம்முடைய செல்போன் எண்ணுக்கு எந்த தகவலும் வரவில்லை. இதனால் பதிவு செய்யப்பட்டுவிட்டதா? இல்லையா? என தெரியாமல் குழப்பத்துடன் வீடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. எனவே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் கால அவகாசம் கொடுப்பதுடன் மின்வாரிய அலுவலகத்தில் பதிவு செய்ய 2-க்கும் மேற்பட்ட சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்க வேண்டும்.

அலைகழிக்கும் செயல்

சேலம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மகாலட்சுமி:-

ரூ.2 ஆயிரத்துக்கு மேல் 'ஆன்லைன்' மூலம் மின்சார கட்டணம் செலுத்துவோர்களுக்கு மட்டும் ஆதார் எண் இணைப்பு அவசியம் என்று அறிவித்திருக்கலாம். ஆனால் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று சொல்வது ஏழை-எளிய, நடுத்தர மக்களை அலைகழிக்கும் செயல் ஆகும். ஏழை-எளிய மக்களுக்கு சிரமம் இல்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

பனமரத்துப்பட்டியை சேர்ந்த கோபிகண்ணன்:-

மின்சார அலுவலகங்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க எந்த ஒரு சிறப்பு ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதுதவிர அரசு குறிப்பிட்டுள்ள இணையதள லிங்க் செல்போனில் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. நுகர்வோர்கள் பலர் தனியார் கம்ப்யூட்டர் மையத்துக்கு நாடி செல்கின்றனர். இதற்காக ரூ.30 முதல் ரூ.50 வரை செலவு செய்கின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்கட்டணம் செலுத்தும் வரும்போதே ஆதார் எண்ணை இணைக்க மின்வாரிய அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறப்பு முகாம்

தாரமங்கலம் பகுதியை சேர்ந்த ரவி:-

மின் இணைப்புகளில் முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது வரவேற்புக்குரியது. ஆனால் அதே நேரத்தில் வீட்டு வாடகைத்தாரர்களின் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு பங்கம் ஏற்பட்டு விடக் கூடாது. ஆதார் எண் இணைப்பை மக்களுக்கு சிரமம் இல்லாமல் எளிமையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

எடப்பாடி பகுதியை சேர்ந்த சீனிவாசன்:-

அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பு வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. ெரும்பாலான வாடகை வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் உள்ளனர். அவர்களின் ஆதார் எண்ணை உடனடியாக சம்பந்தப்பட்ட வீட்டு மின் இணைப்புடன் இயலாத காரியமாகும். மேலும் ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த இயலும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் மின்கட்டணம் செலுத்த முடியாமல் போனால் நாங்கள் குடியிருக்கும் மின் இணைப்பை துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏற்பாடு

இதுகுறித்து மின்சார வாரிய உயர் அதிகாரிகள் கூறும் போது, மாவட்டத்தில் சுமார் 10 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. பொதுமக்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து கொண்டு வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு மின்சார கட்டணம் செலுத்தும் அலுவலகத்திலும் அலுவலக நாட்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, அங்கு ஒரு கவுண்ட்டர் திறக்கப்பட்டு ஊழியர் நியமிக்கப்பட்டு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இதற்காக பொதுமக்கள் மின் கட்டண அட்டையும் ஆதார் அட்டை நகல் மற்றும் உபயோகித்து வரும் செல்போன் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்றனர்.

மின்வாரியம் ஆராயுமா?

மின்சார கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டாலும், சில மின்நுகர்வோர்களின் ஆதார் எண் 'லிங்க்' ஆகாததால் அவர்களால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அபாரத நடவடிக்கை, மின் இணைப்பு துண்டிப்பு போன்ற பிரச்சினைகளை மின்நுகர்வோர்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இப்பிரச்சினைகளை மின்சார வாரியம் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மின்நுகர்வோர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.


Next Story