மஞ்சூர் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு
மஞ்சூர் போலீஸ் நிலையத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் போலீஸ் நிலையத்தில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். அங்கு பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் குற்ற வழக்குக் கோப்புகளை பார்வையிட்டார். தொடர்ந்து டி.ஐ.ஜி. நிலுவையில் உள்ள நீண்ட கால வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரவு ரோந்து பணி மூலம் குற்றங்களை தடுக்க வேண்டும். மனுதாரர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் கண்ணியமான வார்த்தைகளில் பேச வேண்டும் என்று போலீசாரிடம் அறிவுறுத்தினார். அங்கு பணிபுரிபவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து மஞ்சூர் அரசு மேல்நிலை பள்ளியில் சாலை போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. முத்துசாமி கலந்துகொண்டார். பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களிடம், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், துணை சூப்பிரண்டு மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் துரைராஜ் உடனிருந்தனர்.