ஏரி, பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணி-கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் நேரில் ஆய்வு


ஏரி, பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணி-கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் நேரில் ஆய்வு
x

சேலம் மாவட்டத்தில் ஏரி, பாசன கால்வாய்களில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

சேலம்

தூர்வாரும் பணிகள்

சேலம் மாவட்டத்தில் ஏரி, பாசன கால்வாய்களில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, தூர்வாரும் பணியின் தரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

ஆய்வுக்கு பின் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

விவசாயிகளின் முக்கிய தேவையான நீர், பாசன வசதிக்கு கோடை காலத்தில் நீர்வழிப் பாதைகளை தூர்வாரும் வகையில் சேலம் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் மூலம் சிறப்பு தூர்வாரும் பணிகள் கடந்த 3-ந் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலக் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் 13,496.31 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் 31 எண்ணிக்கையிலான பணிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. கோடை காலத்திலேயே இப்பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு பணிக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைத்து கண்காணிப்பு

மேலும், நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, உழவர் குழுக்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வனத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து இத்தூர்வாரும் பணிகள் கண்காணித்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்சிறப்பு தூர்வாரும் பணியின் தரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு உதவிடும் வகையில் பணிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் முன்னோடி விவசாயிகள், நீர்வளத்துறை உதவிப்பொறியாளர், கிராம நிர்வாக அலுவலர், தொடர்புடைய கிராமத்தின் ஊராட்சி செயலர் ஆகியோரை உள்ளடக்கிய உழவர் குழுக்கள் உதவி வேளாண்மை அலுவலரின் ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது வாட்ஸ்-அப் குழுவின் மூலம் சிறப்பு தூர்வாரும் பணியின் முன்னேற்றம் குறித்த தகவல்கள், பணிகளின் தரம் அல்லது தாமதம் குறித்த புகார்களை பெறுதல், எதிர்காலப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குதல் மற்றும் பணிகளை சுமூகமாக நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற பணிகளை செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூக்கனேரியில் ஆய்வு

முன்னதாக சேலம் மூக்கனேரி, நெய்காரப்பட்டி, அம்மாபாளையம், திப்பம்பட்டி மற்றும் வேப்பிலைப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் நர்மதாதேவி, சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story