ரெயில் பெட்டிகள் நிற்பதை பயணிகள் தெரிந்து கொள்ள டிஜிட்டல் பலகைகள்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை பயணிகள் தெரிந்து கொள்ள மீண்டும் டிஜிட்டல் பலகைகள் பொருத்தப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் பலகைகள்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் நின்று செல்கின்றன. இதற்கு வசதியாக 5 நடைமேடைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நடைமேடைகளில் ரெயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை அறிவிக்கும் டிஜிட்டல் பலகைகள் இருந்தன. ஒவ்வொரு ரெயிலும் வருவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்பு, ரெயில் பெட்டிகள் நிற்கும் இடம், டிஜிட்டல் பலகைகளில் ஒளிரும்.
அதை பார்த்து பயணிகள் தாங்கள் பயணிக்க வேண்டிய பெட்டியை முன்கூட்டியே அறிந்து தயாராகி விடுவார்கள். இதனால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் ரெயிலில் ஏறுவதற்கு வசதியாக இருந்தது. இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் பலகைகள் அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக பெட்டிகளின் வரிசை எண்ணை குறிப்பிட்டு, சாதாரண தகவல் பலகைகள் வைக்கப்பட்டன.
மீண்டும் பொருத்தும் பணி
ஆனால் ரெயில் பெட்டிகள் நிறுத்தப்படும் இடத்தை சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை. இதனால் குடும்பத்துடன் வரும் பயணிகள், முதியவர்கள் ரெயிலில் ஏறுவதற்கு சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் மீண்டும் டிஜிட்டல் பலகைகளை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 5 நடைமேடைகளிலும் தலா 26 டிஜிட்டல் பலகைகள் வீதம் பொருத்தப்பட இருக்கிறது.
இந்த புதிய டிஜிட்டல் பலகைகள் தொலைக்காட்சி வடிவில் பெரிதாக இருக்கிறது. இதனால் ரெயில்களின் பெயர், எண் மற்றும் பெட்டிகளின் எண் ஆகியவை பெரிதாக ஒளிரும். அதன்மூலம் ரெயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை பயணிகள் எளிதாக பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம். இது விரைவில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.