தபால்காரர் மூலம்ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றுஅதிகாரி தகவல்


தபால்காரர் மூலம்ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றுஅதிகாரி தகவல்
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தபால்காரர் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றை பெற்று பயன்பெறுமாறு புதுச்சேரி கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், இம்மாதம் முதல் அவர்களது வீட்டு வாசலிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக அரசுக்கும், இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கடந்த 30.6.2023 அன்று கையெழுத்தாகி உள்ளது. இந்த ஆண்டு தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் என 7 லட்சத்து 198 பேர், தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரில் சென்று இந்த சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70-ஐ தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

வீடு தேடி வருகிறது

ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், செல்போன் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்பிக்க முடியும். மேலும் தங்களது செல்போனில் Postinfo App-ஐ Service Request-ல் உங்கள் தேவையை பதிவு செய்து இந்த சேவையை பெற்றுக்கொள்ளலாம். எனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழக அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story