தீட்சிதர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு:கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசனம் செய்த 7 பெண் அதிகாரிகள் கோவிலுக்குள் காங்கிரஸ், பா.ஜ.க.வினர் போட்டிப்போட்டு போராட்டம்


தீட்சிதர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு:கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசனம் செய்த 7 பெண் அதிகாரிகள் கோவிலுக்குள் காங்கிரஸ், பா.ஜ.க.வினர் போட்டிப்போட்டு போராட்டம்
x

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி 7 பெண் அதிகாரிகள் தரிசனம் செய்தனர். இதனால் தீட்சிதர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே கோவிலுக்குள் காங்கிரஸ், பா.ஜ.க.வினர் போட்டிப்போட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கடலூர்

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மூலவர் நடராஜர் சித்சபையில் இருந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அவரை கனகசபையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் தற்போது கோவிலில் நடந்து வரும் ஆனித்திருமஞ்சன விழா காரணமாக, கடந்த 24-ந்தேதி கனகசபையில் ஏறி, நடராஜரை தரிசிக்க பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு (அதாவது நேற்று வரை) அனுமதி இல்லை என்று பொது தீட்சிதர்கள் தரப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பும், புகாரும் தெரிவித்த நிலையில், இந்துசமய அறநிலையத்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 24-ந்தேதி அந்த அறிவிப்பு பலகையை அகற்ற முயன்றும் அது முடியாமல் போனது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் ஆனி திருமஞ்சன தரிசன விழா முடிந்த பின்னர், அதிகாரிகள் அதிரடியாக அறிவிப்பு பலகையை அகற்றினர். இருப்பினும் தீட்சிதர்கள் கனகசபையின் கதவுகளை திறந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

நேற்று மதியம் காங்கிரஸ் கட்சியினர் கனகசபை மீது ஏற முயன்ற போது, அவர்களுடன் தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில் மாலை 5 மணிக்கு மீண்டும் காங்கிரஸ் கட்சியினர் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.என்.ராதா தலைமையில் அங்குவந்தனர். அவர்கள் அணிந்திருந்த சட்டையை கழற்றிவிட்டு, கனகசபை படியின் மீது ஏறி நின்று தீட்சிதர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தீட்சிதர்கள் அரசாங்கத்தை எதிர்க்க கூடாது, நாங்களும் உங்கள் நண்பர்கள் தான், கோவிலுக்கு வரும் பக்தர்களை கனகசபை மீது ஏற்ற வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர்.

தீட்சிதர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க.

இதற்கிடையே பா.ஜ.க. வினர் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் கே.மருதை தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், கோபிநாத் கணேசன், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாநில துணைத் தலைவர் கேப்டன் ஜி.பாலசுப்பிரமணியன், ஆன்மிக பிரிவு ஜெயகோபால் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர், கனக சபையின் முன்பு திரண்டு வந்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஓம் நமச்சிவாய, நமச்சிவாய என்று கோஷங்களை எழுப்பினர். காங்கிரஸ், பா.ஜ.க. வினர் கனகசபை முன்பு நின்று போட்டிப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

7 பெண்கள் தரிசனம் செய்தனர்

இதற்கிடையே கனகசபை மீது ஏறுவதற்கு கோவிலில் 2 வழிகள் உள்ளது. இதில் 2-வது வழியில் காங்கிரஸ், பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு தீட்சிதர்கள் உள்பட அனைவரும் திரண்டு நின்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், கனகசபையின் 1-வது வழி எப்போதும் பக்தர்கள் யாருமின்றி இருந்தது. இந்த சூழலில் ஒரு பெண் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பெண் போலீசார், இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த பெண் அதிகாரிகள் 2 பேர் என மொத்தம் 7 பெண் அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக கனகசபையின் 1-வது வழி வழியாக உள்ளே சென்றனர்.

தள்ளுமுள்ளு

தொடர்ந்து அவர்கள் மூலவர் நடராஜரை தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்துவிட்டனர். இதை சற்றும் எதிர்பாராத தீட்சிதர்கள், அங்கு ஓடோடி வந்தனர். அதற்குள் பெண் அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதைத்தொடர்ந்து தீட்சிதர்கள் அந்த பகுதியில் திரண்டு வந்து போலீசாருடன் வாக்குவாதத்தில், ஈடுபட்டனர். அப்போது எங்களது பூஜை விதிகளை மீறி எவ்வாறு செல்லலாம், இது மிகவும் கண்டிக்கதக்கது என்று கூறிய அவர்கள், பெண் அதிகாரிகள் கனகசபை மீது ஏறிய போது ஒரு தீட்சிதரை கீழே தள்ளியதாகவும், பொது தீட்சிதர்கள் குற்றம்சாட்டினர். இதனால் போலீசார், தீட்சிதர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பதற்றம் மேலும் அதிரிகத்தது.

கனகசபை விவகாரத்தில் நடராஜர் கோவிலில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story