பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும்
பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என கே.வி.குப்பம் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கே.வி.குப்பம் ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் லோ.ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் த.கல்பனா, தலைமை இடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பா.வேலு உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.சீதாராமன், தாமோரவி, ராஜா, வேங்கையன், சுரேஷ், வேலு, சரளா, விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களின் மீது உறுப்பினர்கள் பேசியதாவது:-
காளாம்பட்டு, கெங்கசாணி குப்பம் காலனி பகுதியில் பல ஆண்டுகளாக தொகுப்பு வீடுகள் பழுது அடைந்து கம்பிகள் தொங்கியபடி, குடிஇருப்போர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. உடனடியாக வீடுகளை சீர் அமைக்கவேண்டும். பி.என்.பாளையம், புதூர், குக்கலபள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர பஸ்வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். தேவரிஷிகுப்பம், கெம்மங்குப்பம் பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்றனர்.
வட்டார கல்வி அலுவலர் சுமதி பேசுகையில் அங்கன்வாடி மைய கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பை கருதி உடனே சீரமைக்க வேண்டும் என்றார்.
மைக்குகள் வேலை செய்யாததால் கவுன்சிலர்கள் அனைவரும் சத்தமாக பேசியதால் கூட்டத்தில் தொடக்கம் முதல் கடைசி வரை ஒரே கூச்சலாக இருந்தது.