பழுதடைந்த நூலக கட்டிடம்; ஒழுகும் மழைநீர்
சேரங்கோட்டில் பழுதடைந்த நூலக கட்டிடத்தில், மழைநீர் ஒழுகுகிறது. இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பந்தலூர்,
சேரங்கோட்டில் பழுதடைந்த நூலக கட்டிடத்தில், மழைநீர் ஒழுகுகிறது. இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நூலக கட்டிடம்
பந்தலூர் அருகே சேரங்கோடு பஜார், சிங்கோனா, படச்சேரி, சேரம்பாடி டேன்டீ உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் நூலகம் இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் பந்தலூரில் உள்ள நூலகத்தை பயன்படுத்தி வந்தனர். தொலைதூரத்தில் நூலகம் உள்ளதால், சேரங்கோட்டில் நூலகம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேரங்கோட்டில் இருந்து சிங்கோனா செல்லும் சாலையில் சமுதாயக்கூடம் அருகே கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில், நூலகம் கட்டப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நூலகத்துறை மூலம் ஏராளமான புத்தகங்கள் வழங்கப்பட்டன. சேரங்கோடு நூலகத்தில் 950-க்கும் மேற்பட்ட வாசகர்கள் உள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நூலகத்திற்கு சென்று புத்தகங்கள், தினசரி நாளிதழ்களை படித்து வருகின்றனர்.
புத்தகங்கள் நனையும்
இந்தநிலையில் நூலக கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இதனால் மேற்கூரையில் செடிகள் வளர்ந்து உள்ளது. மேலும் வெடிப்புகள் ஏற்பட்டு பெயர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது. கட்டிடம் பழுதடைந்து உள்ளதால், மழைநீர் உள்ளே ஒழுகுகிறது. இதனால் புத்தகங்கள் நனையும் அபாயம் உள்ளது. இதனால் வாசகர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,
நூலகத்தில் மின் கம்பி அறுந்தும், இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் நூலகம் இருளில் மூழ்கி உள்ளது. மேற்கூரை பழுதானதால், உள்ளே மழைநீர் ஒழுகி வருகிறது. இதன் காரணமாக புத்தகங்கள் நனைந்து நாசமாக வாய்ப்பு உள்ளது. அவ்வப்போது வாசகர்களும் நனைந்து வருகின்றனர். இதுகுறித்து கோரிக்கை விடுத்தும், கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, நூலக கட்டிடத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.