பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரம்


பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை   இடிக்கும் பணி தீவிரம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பள்ளி கட்டிடங்கள் இடிப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை கண்டறிந்து அவற்றினை இடிக்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 170 பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டது. அவற்றில் 77 கட்டிடங்களை இடிக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டிருந்தார். அதில் 39 பள்ளி கட்டிடங்கள் இதுவரையில் இடிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

தற்போது 38 பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இரண்டு நாட்களில் முடிவு பெறும். மீதமுள்ள 93 பள்ளி கட்டிடங்கள் அடுத்த ஒரு வாரத்திற்குள் இடிக்க உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும். இந்த நிலையில் வாலாஜா ஒன்றியம் சென்னசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த பழமை வாய்ந்த பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கும் பணி நேற்று மாலை நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மழைக் காலம் தொடங்கி உள்ளதால் மீதமுள்ள பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு வழங்கி ஒரு வாரத்திற்குள் இடிக்க வேண்டும் என திட்ட இயக்குனரிடம் கேட்டுக் கொண்டார்.

பொதுப்பணித்துறை

அதேபோல பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பழுதடைந்த 118 கட்டிடங்களை இடிக்க உத்தரவு வழங்கப்பட்டதில், இதுவரை 116 பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 பள்ளி கட்டிடங்கள் இந்த வார இறுதிக்குள் இடிக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் ஜி.லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story