பழுதடைந்த தார்ச்சாலை


பழுதடைந்த தார்ச்சாலை
x

பழுதடைந்து கிடக்கும் உஞ்சியவிடுதி-வெட்டிக்காடு ஆற்றங்கரை தார்ச் சாலையினை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் உஞ்சியவிடுதி-வெட்டிக்காடு செல்லும் பகுதியில் சுமார் 5 கி.மீட்டர் தூரமுள்ள கல்லணை கால்வாய் ஆற்றங்கரை சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக ஒரத்தநாடு, தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு இந்த சாலையின் வழியாகத்தான் நெல் விதைகள், உரங்கள் ஆகியவற்றை விவசாயிகள் கொண்டு செல்கின்றனர்.

அதேபோல, அறுவடை செய்யப்படும் நெற்கதிர்கள் உள்ளிட்டவைகளையும் இந்த சாலையின் வழியாகத் தான் கொண்டு வர வேண்டும். இவ்வாறு இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன்தரக்கூடிய இந்த தார்ச்சாலை தற்போது பழுதடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது.

சாலை சீரமைக்கப்படுமா?

இதனால் இந்த சாலையின் வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் ஊரணிபுரம், உஞ்சியவிடுதி பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வெட்டிக்காடு, ஒரத்தநாடு மற்றும் தஞ்சாவூருக்கு செல்ல வேண்டும் எனில், அதிக தூரமுள்ள திருவோணம் வழியாகத் தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொது மக்களுக்கு நேரமும், பணச்செலவுகளும் அதிகம் ஏற்படுகிறது. எனவே உஞ்சியவிடுதி-வெட்டிக்காடு ஆற்றங்கரை தார் சாலையினை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story