பாழடைந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்
செய்யாறில் பாழடைந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
செய்யாறு
செய்யாறில் பாழடைந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்
செய்யாறு டவுன் பங்களா தெருவில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. பரிதிபுரம், திருவோத்தூர், கொட நகர் ஆகிய பகுதி மக்களுக்கான கிராம நிர்வாக அலுவலகம் பங்களாத்தெருவில் உள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டது.
இந்த நிலையில் இந்த அலுவலகம் பழுதடைந்து மேல் கூரைகளில் இருந்த ஓடுகள், மரக்கழிகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அங்கிருந்து கடந்த 2008-ம் ஆண்டு அகற்றப்பட்டது.
தொடர்ந்து சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலகத்தினை இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கடந்த 14 ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கும் அவல நிலையே நீடிக்கிறது.
பொதுமக்கள் அவதி
இந்த அலுவலகம் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டதால் சுகாதாரமற்ற முறையிலும், துர்நாற்றம் வீசுவதாலும் அந்த வழியாக செல்ல கூட முடியவில்லை.
மேலும் கிராம நிர்வாக அலுவலருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்படாத நிலையில், கிராம நிர்வாக அலுவலர்களை சந்திக்க வரும் பொதுமக்கள் அலைந்து திரிந்து அவரை கண்டுபிடித்து சந்தித்து மனு அளிக்க வேண்டி உள்ளது.
இதனால் செய்யாறு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் உள்ள அறை ஒன்றில் தற்காலிகமாக கிராம நிர்வாக அலுவலர் இருக்கை அமைத்து கிராம நிர்வாக அலுவலகமாக மாற்றப்பட்டது.
பண்டிகை காலங்களில் இலவச வேட்டி, சேலை உள்பட அரசின் நலத்திட்ட பொருட்களை வைத்து வினியோகம் செய்ய இது ஏற்ற இடமாக இல்லை.
புதிய கட்டிடம்
பிரதான தெருக்களின் மத்தியில் உள்ள இந்த நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடத்தினை சுற்றி கோவில்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தூய்மையற்ற நிலையில் இப்பகுதி காணப்படுவதால் இங்கு வரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
துர்நாற்றம் வீசும் பகுதியை கடந்து இறைவனை வழிபட செல்வதால் மன வேதனையும் அடைகின்றனர். பல ஆண்டுகளாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தும், புதிய கட்டிடம் கட்ட எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
வருவாய்த்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் கட்ட ஆர்வம் காட்டுவதில்லை என குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
நாளுக்கு நாள் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மேலும் வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்க வேண்டும் என்றும்,
நீண்ட கால கோரிக்கையான பல ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கும் இடத்தினை முற்றிலும் இடித்து அகற்றிவிட்டு புதிய கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடம் கட்டி தர உரிய கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.