திற்பரப்பில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்


திற்பரப்பில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 7:27 PM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

திற்பரப்பு அருவி

கிறிஸ்துமஸ் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்தனர். திற்பரப்பு அருவியில் குளிக்கவும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு தண்ணீர் மிதமாக கொட்டியது.

எனினும் அதில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். குடும்பம், குடும்பமாக வந்து அங்கு நிலவிய இதமான சூழலையும் அனுபவித்தனர்.

மேலும் அருவி பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா, அலங்கார நீரூற்று ஆகியவற்றை ரசித்தனர். பின்னர் திற்பரப்பு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்தபடி படகு சவாரி செய்ததையும் காணமுடிந்தது.

போக்குவரத்து நெருக்கடி

சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்ததால் திற்பரப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெகு தூரத்துக்கு சாலையோரம் வாகனங்கள் நின்றன. ஊர்ந்தபடி வாகனங்கள் சென்று குறிப்பிட்ட இடத்தை அடைவதற்குள் சுற்றுலா பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டது.

எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி திற்பரப்பு பஞ்சாயத்து நிர்வாகமும், போலீசாரும் இணைந்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுகாண முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, முட்டம், வட்டக்கோட்டை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காலை முதல் மாலை வரை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. எனவே சுற்றுலா பயணிகளின் வருகையால் குமரி மாவட்டம் களை கட்டியது.


Next Story