திற்பரப்பு அருவி 'களை' கட்டியது
கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்து குளித்து மகிழ்ந்தனர்.
திருவட்டார்,
கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்து குளித்து மகிழ்ந்தனர்.
கோடை விடுமுறை
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ந் தேதி (புதன்கிழமை) அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. விடுமுறை இன்னும் இரண்டு தினங்களில் முடிய உள்ளதால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக திற்பரப்பு அருவியில் குவிந்தனர். கடந்த வாரம் 2 நாட்கள் மலைப்பகுதியில் மழை பெய்ததால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது.
இங்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவியிலும், அதன் அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் குளித்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். மதியத்திற்கு மேல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் தடுப்பணை பகுதியில் சென்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இதற்கிடைேய சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்கள் அருவி சந்திப்பில் இருந்து வெகு தொலைவுக்கு நீண்ட வரிசையில் நின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாத்தூர் தொட்டிப்பாலம்
திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் தொட்டிப்பாலத்திலும் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பாலத்தில் நடந்து ெசன்று இயற்கை அழகை ரசித்தனர். பாலத்தில் இருந்து கீழே இறங்கி தொட்டிப்பாலத்தின் பிரமாண்டமான தூண்களை பார்த்து ரசித்தனர். மேலும் கீழ் பகுதியில் ஓடும் பரளியாற்றில் குளித்து மகிழ்ந்தனர். அத்துடன் குறைந்த விலையில் கிடைக்கும் அன்னாசிப்பழங்களை வாங்கி சாப்பிட்டனர். அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்ததால் மாத்தூர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மொத்தத்தில் கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதிகள் 'களை' கட்டியது.