திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
பால்ராம்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் அருகே பால்ராம்பட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள், வீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதித்தல் மற்றும் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக திரவுபதி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதைத் தொடர்ந்து தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பால்ராம்பட்டு, மாதவச்சேரி, கச்சிராயப்பாளையம், அக்கராயப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.