அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா


அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறு, நாகூர், தேவூர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு, நாகூர், தேவூர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முத்து மாரியம்மன்

தலைஞாயிறு அடுத்த மணக்குடி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்தது.

முன்னதாக சாமிக்கு பால், பன்னீர், சந்தனம், நெய், திருநீறு, தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று, பின்னர் வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திரவுபதி அம்மன் கோவில்

நாகூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி மாத தீமிதி திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. இதில் பத்தர்கள்அழகு காவடி சுமந்து வந்து தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செல்லமுத்து மாரியம்மன்

கீழ்வேளூர் அருகே தேவூரில் செல்லமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது. விழாவில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் நடந்தது.

தொடர்ந்து விரதமிருந்து காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story