பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
புகாா் பெட்டி
வாய்க்காலில் விரிசல்
கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோவிலில் இருந்து எதிரே உள்ள காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் புகளூரான் வாய்க்கால் உள்ளது. காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த வாய்க்காலின் இடது மண் கரையில் புதிதாக விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாய்க்காலில் மண் சரிவு ஏற்படுவதுடன், அது உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகும் சூழ்நிலை உள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன் வாய்காலில் ஏற்பட்டு உள்ள விரிசலை போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.
பொதுமக்கள், கொடுமுடி.
பணி விரைந்து முடிக்கப்படுமா?
கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மாற்று ரோடு அமைக்கப்பட்டு அதில் ஜல்லி கற்கள் போடப்பட்டு பணி நடந்து வருகிறது. ரோட்டில் கனரக வாகனங்கள் செல்லும்போது அதன் சக்கரத்தில் பட்டு ஜல்லி கற்கள் தெறித்து வந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. இதன்காரணமாக பலர் காயம் அடைந்து உள்ளனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
ஆபத்தான மின் கம்பம்
அந்தியூர் அருகே உள்ள வெள்ளாளபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தின் மேல் பகுதியில் காரைகள் பெயர்ந்து துண்டாகி விழுந்து விடும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மின்சார வாரிய அதிகாரிகள் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள் புதுப்பாளையம்
வீணாகும் குடிநீர்
ஈரோடு திருநகர் காலனி கே.என்.கே மெயின் ரோட்டின் நடுவில் குடிநீர் குழாய் உடைந்து உள்ளது. இதனால் அதில் இருந்து தண்ணீர் கடந்த பல நாட்களாக வெளியேறி வீணாக செல்கிறது. மேலும் கனரக வாகனங்களால் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மீது தண்ணீர் தெறிக்கிறது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருநகர் காலனி.
சாய்ந்த எச்சரிக்கை பலகை
அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் வழியில் பிரம்மதேசம் அருகே மிகவும் குறுகிய பாலம் உள்ளது. இதை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில், அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த பலகை சாய்ந்து உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாய்ந்து உள்ள எச்சரிக்கை பலகையை சரிசெய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அந்தியூர்.