கோவையில் 'தினத்தந்தி' கல்வி கண்காட்சி தொடங்கியது- உயர் படிப்பு விவரங்களை அறிந்து கொள்ள மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
கோவையில் ‘தினத்தந்தி’ கல்வி கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியில் உயர்படிப்பு பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கோவை
கோவையில் 'தினத்தந்தி' கல்வி கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியில் உயர்படிப்பு பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
'தினத்தந்தி' கல்வி கண்காட்சி
பிளஸ்-2 படித்து முடித்து விட்டு அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்று மாணவ-மாணவிகள் முடிவு செய்ய கல்லூரி, கல்லூரியாக சென்று சிரமப்பட வேண்டியுள்ளது. அவர்களின் சிரமத்தை தவிர்க்கவும், பெற்றோர்களின் பொறுப்பை குறைக்கவும், 'தினத்தந்தி' சார்பில் கல்வி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 'தினத்தந்தி'- எஸ்.ஆர்.எம். கல்வி குழுமங்கள் இணைந்து நடத்திய கல்வி கண்காட்சி கோவை-அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் தொடங்கியது.
தொடக்க விழா
கண்காட்சியை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன இயக்குனர் எம்.கிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, சங்கரா கல்வி நிறுவனங்களின் இணை தாளாளர் நித்யா ராமச்சந்திரன், பாரதியார் பல்கலைக்கழக இயக்குனர் (பொறுப்பு) மற்றும் பேராசிரியருமான டாக்டர் ரூபா குணசீலன், திருப்பூர் பதிப்பு தினத்தந்தி மேலாளர் ஏ.மைக்கேல் சுவாமிதாஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். சென்னை தினத்தந்தி மார்க்கெட்டிங் துணைத்தலைவர் ஜி.ராஜேஷ் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கல்வி கண்காட்சியில் மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகள், என்ஜினீயரிங், ஓட்டல் நிர்வாகம், கலை மற்றும் அறிவியல், மரைன் என்ஜினீயரிங், தீத்தடுப்பு பாதுகாப்பு, சட்டம் சார்ந்த படிப்புகள் உள்பட அனைத்து துறைகளில் சிறந்து விளங்கும் முன்னணி கல்வி நிலையங்களின் சார்பில் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படிப்பிலும் உள்ள பாடத்திட்டங்கள், வேலைவாய்ப்பு படிப்புகள் பற்றிய முழுமையான தகவல்கள் மாணவ-மாணவிகளுக்கு சேரும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
ஆர்வத்துடன் கேட்டு தெரிந்துகொண்டனர்
இந்த கண்காட்சியை பார்வையிடுவதற்காக கோவை, நீலகிரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் ஆர்வத்துடன் வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு அரங்கிற்கும் சென்று தாங்கள் அடுத்து என்ன படிக்கலாம்? என்பது பற்றிய ஆலோசனைகளை ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.
மருத்துவம், என்ஜினீயரிங், பல் மருத்துவம், மைக்ரோ பயாலஜி, ஏரோனாட்டிகல் என்ஜினீயரிங், வேளாண் தகவல் தொழில்நுட்பம், சட்டம் சார்ந்த படிப்புகள், வணிகவியல் உள்பட பல்வேறு படிப்புகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் அவற்றில் சேர்ந்து படிப்பதற்கான வழிமுறைகள், அதில் சேருவதற்கான கல்வி தகுதிகள், எவ்வளவு, உதவித் தொகை பெறுவதற்கான தகுதிகள் போன்ற விவரங்களை கண்காட்சிக்கு வந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டனர். அவர்களுக்கு அந்தந்த அரங்குகளில் இருந்தவர்கள் தெளிவான விளக்கங்கள் அளித்தனர்.
கையேடுகள்
தேசிய அளவில் நடத்தப்படும் உயர் கல்விக்கான நுழைவு தேர்வுகள், அவற்றை எழுதுவதற்கான பயிற்சி மற்றும் வழி முறைகள் குறித்தும் கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்படுகின்றது. மேலும், மேற்படிப்பு தொடர்பாக மாணவ-மாணவிகள் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் கண்காட்சியில் விளக்கங்களை பெறலாம். இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் சென்று படிக்கக்கூடிய படிப்புகள் மற்றும் அது பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ள கண்காட்சியில் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. கல்வி நிறுவன அரங்குகளில் அந்த நிறுவனங்களை பற்றிய கையேடுகள், விளக்க குறிப்புகள் வழங்கப்பட்டன.
29-ந்தேதி நிறைவடைகிறது
'தினத்தந்தி' கல்வி கண்காட்சி 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை கண்காட்சி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசம். கண்காட்சியை ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் பார்வையிட்டனர். இந்த கண்காட்சியில், சென்னை எஸ்.ஆர்.எம். கல்வி குழுமங்கள், பிளாட்டினம் ஸ்பான்சராக பார்க் கல்வி நிறுவனங்கள் மற்றும் அசோசியேட் ஸ்பான்சர்களாக வேல்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனம், அமெட் கடல்சார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம், பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் இடம் பெற்றுள்ளன. கல்வியாளர் சி.ராஜா, கோவை அண்ணா பல்கலைக்கழக டீன் டாக்டர் எம்.சரவணகுமார், பாரதியார் பல்கலைக்கழக இயக்குனர் டாக்டர் ரூபா குணசீலன் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்வி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.