தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பாலத்தில் பள்ளம்
கரூர் மாவட்டத்தையும், நாமக்கல் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கடந்த 1957-ம் ஆண்டு காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ்கள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் இரவு, பகலாக சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த பாலம் கட்டப்பட்டு 65 ஆண்டுகளுக்கு மேல் ஆனதன் காரணமாக அதன் அருகே புதிய பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில் பழைய காலத்தில் நெடுகிலும் சுமார் 13-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய பெரிய பள்ளம் பாலத்தின் குறைக்கே ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் தொடர்ந்து நிலை தடுமாறி செல்கின்றன. இரவு நேரத்தில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வாகன ஓட்டிகள், கரூர்.
நிழற்குடையில் ஒட்டப்படும் சுவரொட்டிகள்
கரூர் மாவட்டம் ஈரோடு -கரூர் நெடுஞ்சாலையில் நொய்யல் அருகே குந்தாணிப்பாளையம் நத்தமேடு பஸ் நிறுத்தம் அருகே லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிழற்குடையில் பொதுமக்கள் அமர்ந்திருந்து பஸ் ஏறி பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நிழற்குடைக்குள் பல்வேறு வகையான விளம்பர சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். இதனால் நிழற்குடையே சுவரொட்டிகளாக காட்சியளிக்கிறது. இதில் பல்வேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பயணிகள் முகம் சுழித்து செல்கின்றனர். எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நிழற்குடைக்குள் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றி சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பயணிகள், குந்தாணிப்பாளையம்.
மூடப்பட்ட ஆழ்துளை கிணறு
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே செல்வநகரில் ஒன்றிய பொது நிதி 2016- 2017-ம் நிதி ஆண்டில் ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து முத்தனூர் வரை குடிநீர் குழாய் அமைத்தல் பணி நடைபெற இருந்தது. இந்நிலையில் சில காரணங்களுக்காக முத்தனூரில் தார் சாலை ஓரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின் மோட்டார் பொருத்தப்பட்டு அதிலிருந்து முத்தனூரில் உள்ள மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மின்மோட்டோருக்கு செல்லும் மின் இணைப்பு வயரை திருடர்கள் வெட்டு எடுத்து சென்று விட்டனர். அதன் காரணமாக குடிநீர் குழாயில் இருந்து குடிநீர் செல்வது தடையானது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக அப்படியே உள்ளது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் தார் சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. அப்போது அந்த ஆழ்துளை கிணறை மூடிவிட்டனர். இதனால் அரசுக்கு ரூ.4.90 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மூடப்பட்ட ஆழ்துளை கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், நொய்யல்.
பூட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம்
கரூர் மாவட்டம் சேமங்கி செல்வநகரில் உள்ள பெண்களின் நலன் கருதி அந்த பகுதியில் பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகத்தில் உள்ள கழிவுநீர் குழாயில் பழுது ஏற்பட்டு கழிவுநீர் குழாய் வழியாக கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றதன் காரணமாக சுகாதார வளாகத்தை பூட்டி வைத்தனர். தற்போது வரை அதனை சரிசெய்யாததால் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
லில்லி புஷ்பம், சேமங்கி.