தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது முனியங்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலிருந்து ரோட்டிற்கு மேற்கு புறத்தில் சின்னேரி என்ற ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரிக்கரை முழுவதும் அதிக அளவில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் செல்லும் ஏரிக்கரை பாதை முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாய நிலங்களுக்கு செல்லும் விசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இளவரசன், முனியங்குறிச்சி.

கீழே விழும் வாகன ஓட்டிகள்

அரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் முதியவர்கள், குழந்தைகள் தெருக்களில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருமானூர்.

சாலையில் செல்லும் கழிவுநீர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் 5 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இதற்காக வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் அதே பகுதியில் தனியார் ஓட்டல்கள், தேநீர் விடுதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக உள்ளது. இந்நிலையில் சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக சாக்கடையில் கழிவுநீர் செல்லாமல் அனைத்து கழிவுநீர்களும் சாலையின் நடுவே செல்வதால் அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பொத்தியவாறு செல்கின்றனர். மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஜெயங்கொண்டம்.


Next Story