தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

ஏரியில் கலக்கும் கழிவுநீர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உய்யக்கொண்டான் ஏரி உள்ளது. ஒரு காலத்தில் இந்த ஏரி நீரை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த ஏரியில் கழிவு நீர் கலப்பதுடன் தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த ஏரியை தற்போது பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரி தூர்வாரப்படாமல் தூர்ந்துபோன நிலையில் உள்ளதால், மழை பெய்யும்போது மழை நீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த ஏரியில் கழிவு நீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுத்து தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விவசாயிகள், ஜெயங்கொண்டம்.

வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனை பகுதியில் வாகன நிறுத்துமிடம் முறையாக அமைக்கப்படாமல் உள்ளதால், வெளியூர்களில் இருந்து வரும் நோயாளிகள் தங்களின் வாகனங்களை நோயாளிகளுக்கு இடையூறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மருத்துவமனை வளாகத்தில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரேஷ்மா, ஜெயங்கொண்டம்.

தெருநாய்கள் தொல்லை

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும், சாலையில் நடந்து செல்லும் குழந்தைகளையும் கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், வி.கைகாட்டி.


Next Story