தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், கும்மங்குடி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலை வழியாக சைக்கிளில் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் சாலையில் செல்ல முடியாமல் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சாருலேகா, கும்மங்குடி, புதுக்கோட்டை.
தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமளம் ஒன்றியத்தில் செங்கீரை கிராமத்தில் இருந்து அரிமளம் செல்லும் வழியில் 6 கிலோ மீட்டர் தொலைவு வரை சாலையோரத்தில் தைல மரக்காடு உள்ளது. இந்த வழியாக ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலையோரத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால், இந்த வழியாக பெண்கள் உள்பட பொதுமக்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தெரு விளக்கு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அழகு, செங்கீரை, புதுக்கோட்டை.