தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

சீரமைக்கப்படாத விளையாட்டு உபகரணங்கள்

திருச்சி சுப்பிரமணியபுரம் சுந்தர்ராஜ் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு பூங்கா உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சிறுவர்கள் விளையாடி வருகிறார்கள். மேலும் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். ஆனால் இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் மிகவும் சேதமடைந்துள்ளன. மேலும் பூங்காவில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்துள்ளன. எனவே இந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதுடன் விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வர்ஷினி, சுப்பிரமணியபுரம், திருச்சி.

கழிவுநீர் கலக்கும் பாசன வாய்க்கால்

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வடகாபுத்தூரில் உள்ள பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமலும், சிலர் கழிவுநீரை கலந்து விடுவதினாலும் பெரும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வடகாபுத்தூர், திருச்சி.

நோய் பரவும் அபாயம்

திருச்சி மாவட்டம், நெம்பர்-1 டோல்கேட் , சமயபுரம் பஸ் நிறுத்தம் அருகில் செல்லும் வாய்க்காலில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தனபால், நம்பர்-1 டோல்கேட், திருச்சி.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாநகராட்சி திருவரங்கம் காந்தி ரோடு மேம்பாலம் கீழே நேரு தெரு சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கருணாநிதி, கல்லக்குடி, திருச்சி.


Next Story