தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வங்கி வாடிக்கையாளர்கள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நீதிமன்றம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்தில் கடந்த 15 நாட்களாக பணம் வராததால் வங்கி வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆலங்குடி, புதுக்கோட்டை.
தெருநாய்களால் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், ரெகுநாதபுரம், புதுவிடுதி, காடம்பட்டி, கிளாங்காடு, பாப்பாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றிவருகின்றன. இவை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கடிக்க பாய்வதால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இதனால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. இப்பகுதிகளில் விளையாடும் சிறுவர், சிறுமிகளை தெருநாய்கள் கடிக்க வருவதினால் பெற்றோர்கள் பயத்தில் தங்களின் குழந்தைகளை வெளியே அனுப்புவது இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சேக்பகுர்தீன், அருத்தோடிப்பட்டி, புதுக்கோட்டை.