தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
திருச்சி அதவத்தூர் இ.பி. முதல் பிராட்டியூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் வரை அமைக்கப்பட்டுள்ள தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன், சைக்கிளில் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆவதினால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அதவத்தூர், திருச்சி.
ஆபத்தான கழிவுநீர் வாய்க்கால்
திருச்சி மாவட்டம் தென்னூர் மின்சார வாரிய அலுவலகம் அருகே அமைந்துள்ள தனியார் பள்ளியின் சுற்றுச்சுவரையொட்டி கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் ஆழமாகவும் உள்ளது. இந்த நிலையில் இந்த கழிவுநீர் வாய்க்கால் ஓரமாகத்தான் பள்ளி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் சாலையில் வாகனங்கள் வரும்போது கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை சிமெண்டு சிலாப் கொண்டு மூடி நடை பாதை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அபுபக்கர் சித்திக், தென்னூர், திருச்சி.
சாலை அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெட்டவாய்த்தலை ஊராட்சி தேவஸ்தானம் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்கும் வகையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சாலையை பெயர்த்து ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதிக்கு வரும் பஸ் சுமார் 4 கிலோ மீட்டருக்கு முன்பே மக்களை இறக்கி விடுவதினால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெட்டவாய்த்தலை, திருச்சி.
குடிநீர் குழாய்களில் உடைப்பு
திருச்சி கே.கே.நகர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணமூர்த்தி நகரில் 10-க்கும் மேற்பட்ட இடத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் தேங்கி நிற்கும் நீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாவதுடன், தெருக்களில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கிருஷ்ணமூர்த்தி நகர், திருச்சி.
கழிவுநீர் கலந்த குடிநீர்
திருச்சி காஜாபேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இந்த நீரை குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காஜாபேட்டை, திருச்சி.
ஆபத்தான மின்கம்பம்
திருச்சி மாநகராட்சி, எடமலைப்பட்டிபுதூர், ராமச்சந்திரா நகர், செட்டியா பட்டி மெயின்ரோடு, கிருஷ்ணவேணி நகரில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்பு கூடு போல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கிருஷ்ணவேணி நகர், திருச்சி.
சேதமடைந்த கழிவுநீர் பாலம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், கரிக்கான்குள தெரு, காந்தி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் இந்த ஓட்டையில் காலைவிட்டு கீழே விழுந்து காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காந்திநகர், திருச்சி.