தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம், குந்தாணிபாளையம் நத்தமேட்டில் இருந்து நல்லிக்கோவில் செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் தற்போது தார் சாலை சிதிலமடைந்து குண்டும் ,குழியுமாக உள்ளது. இந்த தார் சாலை வழியாக பள்ளி, கல்லூரி பஸ்களும், கார் ,லாரி, டிராக்டர், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. தார் சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான தார் சாலையை சீரமைத்து விபத்தினை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுப்பிரமணி, வேட்டமங்கலம்.
கழிவுநீர் கால்வாயில் முளைத்துள்ள செடி, கொடிகள்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள காளிபாளையம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் கழிவுநீர் கால்வாய் வெட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் கழிவுநீர் கால்வாயில் ஏராளமான செடி, கொடிகள் முளைத்துள்ளது. இதன் காரணமாக விவசாயத் தோட்டத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் இந்த கழிவுநீர் கால்வாய் வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயில் முளைத்துள்ள பல்வேறு வகையான செடி வகைகளை அகற்றி கழிவுநீர் மற்றும் மழைநீர் தாராளமாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தமிழரசன், காளிபாளையம்.