தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மழைநீர் வடிகால் தூர்வாரப்படுமா?
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம், கருவூல அலுவலகம், கிளைச் சிறைச்சாலை ஆகியவை அனைத்தும் ஒரே வளாகத்திற்கு உள்ளேயே உள்ளது. இந்த நிலையில் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் இ-சேவை மையம் செயல்படும் கட்டிடத்தின் முன்பு மழைநீர் வழிந்தோடும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த மழை நீர் செல்லும் வகையில் உள்ள வடிகாலை சரியாக பராமரிப்பு செய்யாத காரணத்தால் அதில் செடிகள் முளைத்து வருகிறது. அதிக அளவில் செடிகள் வளர்ந்து வருகின்ற சூழ்நிலையில் விஷ ஜந்துக்கள் அதில் தங்க கூடும். பல்வேறு தேவைகளுக்காக இந்த அலுவலக வளாகத்திற்குள் வரும் பொதுமக்களுக்கு அது அச்சுறுத்தலாக மாறிவிடும். எனவே மழைநீர் வடிகாலில் முளைத்துள்ள செடிகளை அகற்ற வேண்டும். அதுபோல் இந்த அலுவலக வளாகம் முழுவதும் தேவையற்ற குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்துக்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், குளித்தலை.
பாலம் கட்டப்படாததால் பொதுமக்கள் அவதி
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முத்தனூரில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு புகழூர் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக முத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் விவசாயிகள் பாலத்தின் வழியாக இடு பொருட்களை கொண்டு சென்றும், விளைபொருட்களை அங்கிருந்து எடுத்து வந்தனர். கட்டப்பட்ட பாலம் 60 ஆண்டுகள் ஆனதால் பாலம் மிகவும் சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் இருந்தது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தனர். இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்த பாலத்தை உடைத்து போட்டனர். ஆனால் உடைத்த பாலத்திற்கு பதிலாக இதுவரை பாலம் கட்டப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு செல்ல முடியாமலும், விவசாயிகள் இந்த வழியாக இடுபொருட்களையும், விளைபொருட்களையும் எடுத்துச் செல்ல முடியாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இடிக்கப்பட்ட பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பரணிதரன், முத்தனூர்.