தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

சீரமைக்கப்படாத அரசு கட்டிடம்

கரூர் மாவட்டம், தவுட்டுபாளையத்தில் இருந்து கட்டிப்பாளையம் செல்லும் சாலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆயத்த ஆடை தயாரிப்பதற்கு கட்டிடம் கட்டப்பட்டது. அதையொட்டி மகளிர் சுய உதவிக்குழு கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆயத்த ஆடை தயாரிப்பு கட்டிடம் மிகவும் பழுதடைந்து மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகி வருகிறது. இதனால் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கட்டிடம் சீரமைக்கப்படாமல் அப்படியே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த ஆயத்த ஆடை தயாரிப்பு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சண்முகம், கட்டிப்பாளையம்.

சட்ட விரோதமாக மது விற்பனை

கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியில் வேலாயுதம்பாளையம்-கரூர் நெடுஞ்சாலை ஓரத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடை மதியம் 12 மணிக்கு மேல் திறக்கப்படுகிறது. இந்நிலையில் கடை திறப்பதற்கு முன்பே அதிகாலை முதல் சட்ட விரோதமாக விற்பனை செய்யும் மது பாட்டில்களை வாங்குவதற்காக ஏராளமானோர் மோட்டார் சைக்கிளில் வந்து தார் சாலை ஓரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மதுபாட்டில்கள் வாங்கி அங்கேயே மது அருந்தி மதுபாட்டில்களை உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர். சில நேரங்களில் போதை தலைக்கேறி அந்த வழியாக தனியாக செல்லும் இளம் பெண்களை பின்னாலே சென்று பயமுறுத்துகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நடராஜன் ,அய்யம்பாளையம்.


Next Story