தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

பயனற்ற பயணிகள் நிழற்குடை

கரூர் மாவட்டம், நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள புங்கோடையில் சுற்றுவட்டார பகுதி பயணிகளின் நலன் கருதி நிழற்குடை கட்டப்பட்டது. இந்நிலையில் அங்கு தார் சாலையின் குறுக்கே பாலம் கட்டியதால் உயரமான தார்சாலை போடப்பட்டது. இதன் காரணமாக பயணியர் நிழற்குடை பள்ளத்திற்கு சென்று விட்டது. இதனால் பயணிகள் அங்கு அமர்ந்து பஸ்சுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அருகாமையில் உள்ளவர்கள் பயணியர் நிழற்குடைக்குள் தேங்காய் மட்டைகளை குவித்து வைத்துள்ளனர். இதன் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அப்பகுதியில் சாலை ஓரத்தில் வெயிலில் நின்று பயணம் செய்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புங்கோடை.

குடிநீர் குழாயில் உடைப்பு

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தரகம்பட்டி-மணப்பாறை சாலை காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த குடிநீர் குழாயில் தரகம்பட்டி வெங்கடேஸ்வரா நகர் அருகே மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக பெருமளவு தண்ணீர் வீணாகி ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தரகம்பட்டி.

வாகன ஓட்டிகள் அவதி

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தில் மேம்பாலம் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக கரூர்-சேலம், சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு அந்த வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் தவுட்டுப்பாளையம் போலீஸ் செக் போஸ்ட் அருகே சிறிது தூரம் தார்சாலை அமைக்காமல் அப்படியே விட்டு விட்டதால் அப்பகுதி சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் நிலை தடுமாறி சென்று வருகின்றன. சில நேரங்களில் தார்சாலையையொட்டி பள்ளம் இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தவுட்டுப்பாளையம்.

அடிபம்பால் தொடரும் விபத்து

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சொட்டையூரில் வேலாயுதம்பாளையம்-நொய்யல் நெடுஞ்சாலையில் தார்சாலை ஓரத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆள்துளை கிணறு அமைக்கப்பட்டு அடிபம்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் குடிநீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் தெருக்களில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தார் சாலை விரிவாக்கத்தின் காரணமாக தார்சாலை அடிபம்பு அருகே செல்கிறது. இதனால் இரவு நேரங்களில் வேலாயுதம்பாளையம் பகுதியில் இருந்து நொய்யல் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் குடிநீர் கைப்பம்பு இருப்பது தெரியாமல் அதில் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சொட்டையூர்.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கரூர் அருகே உள்ள சந்தன காளிபாளையம் பகுதியில் சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. ஒரு சில நேரங்களில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் குப்பை தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கரூர்.


Next Story