தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, முள்ளங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மறவன்பட்டியில் இருந்து கருப்பக்கோன்தெரு வழியாக கோட்டைக்காடுக்கு செல்லும் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இளையராஜா,கறம்பக்குடி.
இடிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள திருக்கட்டளை ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளி கட்டிடத்தின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி நீண்ட காலமாக இடிந்து விழுந்து காணப்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருக்கட்டளை.
சிதிலமடைந்த தார்சாலை
புதுக்கோட்டை மாவட்டம் சிக்கப்பட்டி-கொத்தமங்கலம் வெள்ளாகுளம் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராபட், வெள்ளாகுளம்.
ஆபத்தான மின்கம்பம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள வண்ணாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சீப்புக்காரன்பட்டி கிராமத்தில் மண்டலங்காத்தான் கோவில் அருகே சாலையோரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சீப்புக்காரன்பட்டி.
குளத்தை தூய்மைபடுத்த வேண்டும்
புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில் அருகே உள்ள பல்லவன் குளத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இந்த குளத்தில் பக்தர்கள் பூஜைகள் செய்து வழக்கம். தற்போது ஆடிமாதம் நடைபெற்று வருவதால் ஆடிபெருக்கு விழா வருவதற்குள் இந்த குளத்தை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குமரேசன், புதுக்கோட்டை.