தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பொதுகழிவறை அமைக்கப்படுமா?
பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேரளி கிராமத்தில் இருந்து பீல்வாடி கிராமத்திற்கு செல்லும் சாலையின் பகுதியில் அரியலூர் சாலையின் இடது புறம் அப்பகுதி மக்கள் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் பொதுகழிவறை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பேரளி.
சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் 4 ரோடு சந்திப்பு பகுதியில் தினமும் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பயணிகள் வெளியூர்களில் இருந்து பெரம்பலூர் வந்தடைகின்றனர். பலர் வெளியூர் புறப்பட்டு செல்கின்றனர். ஆனால் இப்பகுதியில் சுகாதார வளாகங்கள் இதுவரை அமைக்கப்படவில்லை. பொதுமக்கள் மின்வாரிய அலுவலகம் அருகே சாலை ஓரங்களையும், திறந்த வெளியையும் சுகாதார கழிப்பிடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். எந்த நேரமும் நான்கு ரோடு வந்து இறங்கும் பஸ் பயணிகளின் நலனுக்காக சுகாதார வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகமும், மாவட்ட கலெக்டரும் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், துறைமங்கலம்.
எரியாத மின் விளக்கு
பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் சமத்துவபுரம் காந்திநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்கு கடந்த 3 ஆண்டுகளாக எரியவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளதுடன், சாலையை கடக்கும்போது பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுகுமாரன், எளம்பலூர் சமத்துவபுரம்.
குடிநீர் இன்றி மக்கள் அவதி
பெரம்பலூர் மாவட்டம், சின்னசேலம் மெயின் ரோட்டில் உள்ள கைகளத்தூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி தற்போது பயன்பாடு இன்றி உள்ளதால், தற்போது 2 நாட்களுக்கு ஒருமுறை, 4 நாட்களுக்கு ஒரு முறை என பக்கத்து ஊரில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் இப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கைகளத்தூர்.
அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை
பெரம்பலூர் அருகே ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சேரி கிராமத்தில் செட்டிகுளம் பிரதான சாலையில் கவுரிநகர் உள்ளது. இந்த குடியிருப்பில் அரசு ஊழியர்கள், ராணுவத்தினர் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்கள் வீடுகட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். ஊராட்சி மன்றத்திற்கு முறையாக வீட்டுவரி செலுத்தி வருகிறோம். இந்த குடியிருப்பு பகுதியில் சாலை வசதி, மின்கம்பங்கள், தெருவிளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் உடனே செய்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கவுரிநகர்.