தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள தங்கநகரம் கிராமத்தின் அரியலூர்-பெரம்பலூர் ரோட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரியும், காரும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலிருந்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கார் அகற்றப்படாமல் இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியாகி இருந்தது. இதை அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திலிருந்து விபத்தில் சிக்கிய காரை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த குன்னம் போலீசாருக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
கொசு மருந்து அடிக்கப்படுமா?
பெரம்பலூர் நகர பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரவு நேரத்தில் பெரம்பலூர் நகர பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
போதிய கழிவறை வசதி இல்லை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் மாணவ- மாணவிகள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக கழிவறை வசதி போதுமானதாக இல்லை. இதனால் மாணவ- மாணவிகள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அடிக்கடி ஏற்படும் மின்தடை
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூர் பூங்கா பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
எரியாத மின் விளக்குகள்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா மாவிலிங்கை கிராமத்தில் மின் விளக்குகள் முறையாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் சாலையில் நடந்து செல்ல குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இரவு நேரத்தில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.