தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா?

அரியலூர் முருகன் கோவில் எதிரில் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்ந்துவிட்டதால் மழை பெய்யும்போது, மழைநீர் செல்ல வழியின்றி கழிவுநீருடன் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வேலாயுதநகர் மெயின் ரோட்டிற்கும் மேற்கு புறத்தில் உள்ள வடமன் குட்டை, ஆவேரி, உய்யகொண்டான் ஏரி, கொக்கனேரி, தோப்பேரி ஆகிய நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைபெய்யும்போது மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆனந்தராஜ், ஜெயங்கொண்டம்.

பஸ் நிலையம் அமைக்கப்படுமா?

அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து பொதுமக்கள் அதிகளவில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், சேலம், சென்னை, கோவை, ஜெயங்கொண்டம், கும்பகோணம் என பல்வேறு வெளியூர்களுக்கு பொதுமக்கள் பஸ்கள் மூலம் சென்று வருகின்றனர். மேற்படி அரியலூர் பஸ் நிலையம் சிதிலமடைந்ததையடுத்து புதிய பஸ் நிலையம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்த பஸ் நிலையம் இடிக்கப்பட்டது. ஆனால் அங்கு புதிய பஸ் நிலையம் இதுவரை அமைக்கப்படவில்லை. தினமும் பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள், மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் நின்று வெளியூர் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.

தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் தற்போது தூர்ந்துபோன நிலையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஜெயங்கொண்டம்.

தொற்று நோய் பரவும் அபாயம்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடை வீதியில் இந்தியன் வங்கி அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் தற்போது பெய்து வரும் மழையால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றுவதுடன் இப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மீன்சுருட்டி.


Next Story