தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பொன்னம்பட்டி செல்லும் தார்சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த கரடுமுரடான சாலையில் செல்லும்போது வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் சைக்கிளில் தட்டு தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பொன்னம்பட்டி, கரூர்
புதிய பஸ் நிலையம் வேண்டும்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பஸ் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக பெரும்பாலான பஸ்கள் அரவக்குறிச்சி பஸ் நிலையம் வந்து செல்வதில்லை. காரணம் கேட்டால் பஸ் வந்து நின்று செல்வதற்கு வசதி குறைவாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி அரவக்குறிச்சியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரவக்குறிச்சி
அகற்றப்படாத மின்கம்பம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி புங்கம்பாடி பிரிவு அருகே சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்திற்கு பதிலாக புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. ஆனால் சிதிலமடைந்த மின்கம்பம் அகற்றப்படாமல் அங்கேயே உள்ளது. அந்த மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து இரண்டாக உடைந்து காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரவக்குறிச்சி.
பாலம் கட்டும் பணி
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில் இருந்து சிவாயம், வளையப்பட்டி, பணிக்கம்பட்டி, குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலையில் சிவாயத்தில் இருந்து வளையப்பட்டி பகுதிக்கு இடையே 2 சிறிய பாலங்கள் சாலையின் நடுவே கட்டப்பட்டு வருகிறது. இங்கு கட்டப்பட்டு வரும் ஒரு பாலப்பணிகள் பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் உள்ளன. இதில் மற்றொரு பாலம் பணிகள் காலதாமதமாக நடைபெற்று வருகிறது. எனவே பாலம் கட்டுமான பணிகளை காலதாமதம் இன்றி கட்டி முடிப்பதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அய்யர்மலை
சீரமைக்கப்படாத நீர்த்தேக்க தொட்டி
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள புங்கோடை புகழூர் வாய்க்கால் அருகே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் பொருத்தப்பட்டு அங்கு குடிநீர் தொட்டி வைக்கப்பட்டது. அதில் குடிநீர் நிரப்பப்பட்டது. இதனை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்த மின் மோட்டார் பழுதடைந்ததால் பழுதை நீக்குவதற்காக மின் மோட்டார் எடுத்துச்செல்லப்பட்டது. இருப்பினும் மின்மோட்டார் பொருத்தப்படவில்லை. இதனால் பல ஆண்டுகளாக குடிநீர் நிரப்பப்படாமல் இருந்ததால் நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுப்பிரமணி, புங்கோடை