தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

தெருநாய்கள் தொல்லை

கரூர் பசுபதிபாளையம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் இப்பகுதி வழியாக செல்ல பொதுமக்கள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பசுபதிபாளையம், கரூர்.

ஆபத்தான கிணறு

கரூர் மாவட்டம், கட்டிப்பாளையம் பகுதியில் இருந்து திருக்காடுதுறை பகுதிக்கு செல்லும் வாய்க்கால் கரை ஓரம் போடப்பட்ட தார் சாலையின் அருகே விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு நாளடைவில் சரிவு ஏற்பட்டு தார் சாலை பாதி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. இதனால் கிணறு உள்ள சாலை மிகவும் சிறியதாக ஆகிவிட்டது. இந்த வழியாக நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. விபத்து அபாயம் உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தமிழரசன், கட்டிப்பாளையம்.

குண்டும், குழியுமான தார்சாலை

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், வடுகப்பட்டி, புங்கோடை காளிபாளையம் பகுதி பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காகவும், இப்பகுதி விவசாயிகள் வேளாண் விளை பொருட்களையும், இடு பொருட்களையும் எளிதாக வாகனங்களில் எடுத்து செல்லும் வகையிலும் ஓலப்பாளையத்தில் இருந்து நொய்யல் மெயின் ரோட்டில் உள்ள சேமங்கி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஓலப்பாளையம், கரூர்.

மூடப்படாத கழிவுநீர் வாய்க்கால்

கரூர் பஸ் நிலையத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பாதி உடைந்த நிலையில் நீண்ட நாட்களாகவே மூடப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கரூர்.

ஆபத்தான மின்கம்பம்

கரூர் மாவட்டம், புகழூர் காகித ஆலை குடியிருப்பு பகுதிக்கு பின்புறம் உள்ள பகுதியில் மின் கம்பம் நடப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் மின் கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புகழூர், கரூர்.


Next Story