தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

இடப்பற்றாக்குறையால் சிரமப்படும் மாணவர்கள்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உட்பட்ட மீன்சுருட்டி பகுதியில் ஒரு அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இந்த அரசு விடுதி சுமார் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இந்தக் கட்டிடம் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது இங்கு இயங்கி வந்த மாணவர்கள் விடுதி அருகில் உள்ள ஒரு வீட்டில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கடந்த 15 மாதங்களாக மாணவர்கள் ஆதிதிராவிடர் விடுதி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில், மாணவர்கள் விடுதி இடப்பற்றாக்குறை உள்ளதால் மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மீன்சுருட்டி.

அட்டகாசம் செய்யும் குரங்குகள்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து சமையல் செய்ய வைத்து இருக்கும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சாப்பிட்டு வீணாக்கிவிடுகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வெண்மான்கொண்டான்.

காய்ந்த பனை மரங்கள்

அரியலூர் மாவட்டம், திருமானூரில் இருந்து திருமழபாடி செல்லும் சாலையில் காரப்பாக்கம் மஞ்சமேடு கொள்ளிடம் கரையில் சாலையோரத்தில் 4-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் காய்ந்து உள்ளன. இச்சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் வாகனங்கள் செல்லும்போது இந்த மரங்கள் விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருமானூர்.

தேவையற்ற வேகத்தடைகள்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் இருந்து செல்லும் தார் சாலையில் முத்துசேர்வாமடம் காலனி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் 25-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர தேவைக்கு செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. பள்ளியின் அருகில் மற்றும் பிரிவு சாலையில் உள்ள வேகத்தடையை தவிர மற்ற அனைத்து வேகத்தடைகளையும் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மீன்சுருட்டி.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி, நெருஞ்சிக்கோரை கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் ஏரி, பாப்பான் குட்டை மற்றும் அனைத்து குட்டைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, காற்றாட்டு வாரிகளை தூர்வாரி மழைநீரை சேகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், நெருஞ்சிக்கோரை.


Next Story